காரைக்காலில்
கடலோரம் காட்டுக்குள் மூதாட்டி எலும்புக்கு கூடு
-போலீசார் விசாரணை
திருப்பட்டினத்தை அடுத்த வடக்கு வாஞ்சூர் கடற்கரையை ஒட்டிய கருவேலக் காட்டிலிருந்து எலும்புக்கு கூடாகக் கிடந்த மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பட்டினம் காந்தி சாலையைச் சேர்ந்தவர் அமுல்தாஸ்(68) பழைய மரம், கருவைக் காட்டை வெட்டி வியாபாரம் செய்து வருகிறார். வடக்கு வாஞ்சூர் பஞ்சாயத்தார்களிடம் பேசி கீழையூர் தெற்கு வடிகால் வாய்க்கால் அருகில் உள்ள கருவேலக்காட்டை வெட்ட அனுமதி பெற்றிருந்தார்.
கருவேலக்காட்டை வெட்டுவதற்கு ஆட்களுடன் சென்றபோது காட்டுக்குள் கடந்த ஆறு அல்லது ஏழு மாதத்துக்கு முன் இறந்திருக்கலாம் என கருதப்பட்ட பெண்ணின் சடலம் எலும்புக்கூடாகக் கிடந்ததை பார்த்துள்ளார். பச்சை நிற சேலை, சிவப்பு நிறத்தில் கட்டம் போட்ட ஜாக்கெட் அணிந்து, வெளுத்துப் போன பாவாடை அணிந்திருந்த 60 வயது மதிக்கத் தக்க பெண்ணின் சடலம் எலும்புகள், மண்டை ஓடு தனித் தனியாகக் கிடந்ததையும் வடக்கு வாஞ்சூர் கிராம தலைவர் சாந்தகுமார்(65) என்பவரிடம் தெரிவித்தார்.
பின்னர் கிராமத்தினருடன் சடலம் கிடந்த இடத்தைப் பார்வையிட்டபின் அமுல்தாஸ் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் லெனின்பாரதி மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.