தமிழகம் மற்றும் காரைக்காலுக்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து வானிலை மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் 2வது வாரத்தில் நிறைவு பெறும். அந்த வகையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான சூழல் நிலவுகிறது.இது விலகினால் தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிக்கு மழை பொழிவை கொடுக்கும் என்பதால் இந்த மழையை டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் மழை பெய்தாலும் நீர்நிலைகள் நிரம்ப வில்லை.கர்நாடகாவும் தண்ணீர் தர மறுத்து வரும் நிலையில் இந்த வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தில் சராசரியாக அக்டோபரில் 177.2 மி. மீ. மழையும் நவம்பரில் 178.8 மி.மீ , டிசம்பரில் 92 மி.மீ. மழை பெய்வது இயல்பானதாகும். தமிழகத்தில் மொத்தமாக 448 மி.மீ. மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.ஆனால் அதிக அளவு மழை பொழிவை பெரும் காரைக்கால் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆனால் மாவட்டத்தின் நகரில் உள்ள பெரும்பாலான வடிகால்கள் மற்றும் வாய்க்கால்கள் 80 இன்னும் தூர்வாரப்படாமல் உள்ளது.வடிகால்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்துக் கொண்டு,களிப்பு மண் திட்டாக இருப்பதால் மழை நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் நகர் பகுதி மற்றும் பிற பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்கள், தூர்வாரப்படாததால் சிறு மழை பெய்தாலே மழைநீர் சாலையில் நிற்கும் நிலை உள்ளது.சில நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது.இதை கருத்தில் கொண்டு காரைக்கால் நகர் பகுதியில் உள்ள சாக்கடை,வடிகால் வாய்க்கால்களை உடனடியாக,முழுமையாக தூர்வார வேண்டும்.தவறும்பட்சத்தில் சாலையில் வெள்ளம் போல நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஆனது நேற்று மாலை முதல் காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு நகர் பகுதி,பைபாஸ் சாலை மற்றும் பல்வேறு குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.மேலும் நகரின் பிரதான சாலைகளில் உள்ள வடிகால்களை புனரமைத்து மழை நீரை சேகரிக்க மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.