உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் காரைக்கால் மாணவிக்கு சீட் ஒதுக்க சென்டாக் நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளார்.
புதுச்சேரியில் நடப்பாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை காலதாமதமாகவே துவங்கியது. அதேநேரத்தில் மருத்துவ கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அரசு மருத்துவ கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் காலியாக இருந்த 4 இடங்களை 2ம் கட்ட கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்காமல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கியது. இதன் மூலம் அரசுக்கு ரூ.72 லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டது. அதேபோல், அரசு மருத்துவ கல்லூரியில் காரைக்கால் பிராந்திய ஒதுக்கீட்டில் உள்ள 24 எம்பிபிஎஸ் இடங்களில் 22 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 2 இடங்கள் 3ம் கட்ட கலந்தாய்வு மூலம் புதுவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் தகுதியில்லாத ஒரு மாணவிக்கு பிஏஎம்எஸ் சீட் ஒதுக்கியது. இதனால் மகிழ்ச்சியில் அந்த மாணவி மாகே ராஜீவ் காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்கு சென்றபிறகு தகுதியில்லாமல் அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அந்த மாணவி ஏமாற்றத்துடன் புதுவை திரும்பியுள்ளார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட காரைக்காலை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், அந்த மாணவிக்கு புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் காரைக்கால் பிராந்திய ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர் பிரிவில் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்டாக் கன்வீனரிடமும் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சீட் ஒதுக்காமல் மாணவியை அலைக்கழித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி சென்டாக் நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சென்டாக் மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கூறுகையில், சென்டாக் நிர்வாகம் பல்வேறு குளறுபடிகளுடன் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளது. இதனால் பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இன்று (20ம் தேதி) 12 மணிக்குள் கலந்தாய்வை முடித்து, மாணவி சேர்க்கை பட்டியலை தேசிய மருத்துவ கலந்தாய்வு ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் கடந்த 15ம் தேதி அவசர அவசரமாக 3ம் கட்ட கலந்தாய்வு சீட் ஒதுக்கி, அன்று மாலைக்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்ட நிலையில், இதுவரை கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் பட்டியலையும், காலியிட விவரங்கள் பட்டியலையும் சென்டாக் நிர்வாகம் வெளியிடவில்லை. மேற்கொண்டு மாப்-அப் கலந்தாய்வு நடத்தவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காலியாக உள்ள இடங்கள் பாழடைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.