புதுச்சேரி அரசின் நலவழித்துறை துணை இயக்குனர் ஊட்டச்சத்து பிரிவு ,தேசிய அயோடின் குறைபாடு கோளாறுகள் தடுப்பு திட்டம் மற்றும் அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக அயோடின் குறைபாடு கோளாறுகள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவியப் போட்டி நேற்று நடைபெற்றது.
பள்ளியின் மூத்த விரிவுரையாளர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.பள்ளியின் துணை முதல்வர் ஞானபிரகாசி தலைமை தாங்கினார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜேந்திரன் (பொ),சுகாதார ஆய்வாளர் இளையதசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அரவிந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.மேலும் அவர் பேசுகையில் உலக அயோடின் குறைபாடு கோளாறுகள் தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
அயோடின் என்பது உடலுக்கு தேவைப்படும் முக்கியமான ஒரு மினரல் ஆகும்.அயோடின் குறைபாட்டால் தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பியில் பாதிப்பை உண்டாக்கி தைராய்டு குறைபாடு உண்டாக காரணமாக அமைந்து விடுகிறது.அயோடின் குறைபாடு உடலின் உயரம் மற்றும் பருமனை நிர்ணயிக்கிறது.மேலும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி,மூளை வளர்ச்சியில் அயோடின் பெரும் பங்கு வகிக்கிறது.அயோடின் சத்து குறைபாட்டினால் குழந்தைகளுக்கு படிப்பில் நாட்டமின்மை மந்த நிலை ஏற்படுகிறது.மேலும் கருவுற்ற தாய்மார்களுக்கு தொடர் கருச்சிதைவு குழந்தையின்மை,கருவில் உள்ள சிசு இறந்த பிறக்கும்.மேலும் கருவில் சிசுவின் மூளை,கண்,காது பாதிப்பு ஏற்படுத்தி குழந்தைகள் நிரந்தரவு ஊனமாக பிறக்கின்றன.
குழந்தைகளுக்கு நிரந்தர பாதிப்புகளான தைராய்டு குறைபாடு மனவளர்ச்சி குறைபாடு உடல் ஊனங்கள் ஏற்படுகின்றன என்று கூறினார்.
சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் பேசுகையில் அயோடின் சத்து நிறைந்த முட்டை, பால், மீன், சீஸ் சோளம் ,பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அயோடின் கலந்த உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர் பரமேஸ்வரி,விவேதா ஆகியோர் செய்திருந்தனர்.பள்ளியின் நூலகர் முனைவர் ராஜலட்சுமி நன்றியுரை கூறினார்.