காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அடுத்த வாஞ்சூர் பகுதியில் அதானி குழுமத்திற்கு சொந்தமான தனியார் துறைமுகம் செயல்பட்டு வருகிறது.இங்கு உலகத்தின் பல்வேறு நாட்டில் இருந்து நிலக்கரி,பெட் கோக், உரங்கள், இரும்பு-தாது,ஜிப்சம்,சுண்ணாம்பு,கசடு,கிளிங்கர்,விவசாய பொருட்கள், சிமெண்ட் & மணல்,மரத்தூள், எஃகு, கொள்கலன்கள், மரக்கூழ், திட்ட சரக்கு, மூட்டை சிமெண்ட், பேக் செய்யப்பட்ட சர்க்கரை,சமையல் எண்ணெய், கச்சா எண்ணெய் மற்றும் பிடுமின் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டு தென்னிந்திய பகுதிகள் முழுவதும் ரயில் மற்றும் தரை வழி மார்க்கமாக கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வாறு இறக்குமதியில் ஆண்டுக்கு 21 மில்லியன் டன் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு கையாளப்படுகிறது.இதில் அதிகபட்சமாக இறக்குமதி பொருட்களில் நிலக்கரி முதன்மை பங்கு வகிக்கிறது.அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மலை போல் துறைமுகத்தில் திறந்தவெளியில் குவிக்கப்படுகிறது.பின்னர் இறக்குமதி செய்யப்பட்டதில் நான்கில் இரு பங்கை சரக்கு ரயில்கள் மூலம் அரியலூர்,நெய்வேலி உள்ளிட்ட தனியார் மின் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு நிறுவங்களுக்கும் எடுத்து செல்லப்படுகிறது.
மீதமுள்ள நிலக்கரியை பெரிய ரக சரக்கு லாரிகள் மூலம் விதிமுறைகளை மீறி அளவுக்கதிகமாக பாரங்களை ஏற்றி அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.அவ்வாறு எடுத்து செல்லப்படும் நிலக்கரியானது தார்பாய்களை கொண்டு மூடி எடுத்து சென்றாலும் அதிவேகத்தில் லாரிகள் செல்வதால் நிலக்கரியானது காற்றில் பறக்கிறது.மேலும் வேகத்தடைகள்,பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் கூட வேகத்தை குறைக்காமல் பறக்கும் லாரிகளால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் உயிர் பயத்தில் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.
வாஞ்சூர் அதானி துரைமுகத்தில் புறப்படும் 200 கணக்கான லாரிகள் காரைக்கால் நகர பகுதி வழியாக மாவட்டத்தில் உள் நுழைந்து மேலகாசாக்குடி,நெடுங்காடு வழியாக கும்பகோணம் அரியலூர் வரை நிலக்கரி எடுத்து செல்லப்படுகிறது.மேலும் காரைக்கால் நகர பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் அளவுக்கதிகமான பாரங்களை ஏற்றி கொண்டு செல்லும் லாரிகள் வளைவுகளில் வேகமாக திரும்பும் போது சாலையில் நிலக்கரிகள் சிதறி விடுகின்றனர்.பின்னர் வாகன ஓட்டிகள் செல்லும் பொழுது காற்றில் பறந்து பொதுமக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது.

ஒரு பெரிய ரக சரக்கு லாரியில் அதிகபட்சமாக 25 டன் பாரம் ஏற்றப்படும் என்ற விதிகள் இருந்து விதிகளை மீறி இரு மடங்காக 50 டன் நிலக்கரி ஏற்றப்படுகிறது.இதனால் சில நேரங்களில் லாரியின் அச்சு உடைந்து சாலைகளில் பழுதாகி நின்று விடுகிறது.இதனால் அவ்வபோது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.மேலும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 100 முதல் 200 வரை செல்லும் நிலக்கரி லாரிகளால் சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழுமாக மாறிவிட்டது.இதனால் வாகன ஓட்டிகள் அவ்வபோது விபத்துகளும் ஏற்படுகிறது.

இதுகுறித்து நெடுங்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் கூறுகையில் விதிகளை மீறி இயக்குபடும் நிலக்கரி லாரிகளை கண்காணிக்கும் காரைக்கால் போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.நெடுங்காடு மற்றும் காரைக்கால் நகர பகுதிகளில் அதிவேகமாக இயக்கப்படும் நிலக்கரி லாரிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன்,அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும்.மேலும் தாறுமாறாக செல்லும் நிலக்கரி லாரிகளால் விபத்து ஏற்பட்டு உயிர் பலி போகும் முன் லாரிகளை கடிவாளம் போட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.