திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி.
திருப்பதியில் கடைபிடிப்பது போல ஆன்லைன் டிக்கெட் மூலமாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு.அமைச்சர் சந்திர பிரியங்கா பேட்டி.
காரைக்கால்,செப்.28:
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரேன்ஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது.இங்கு இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி ஆனது மிகவும் பிரசித்தி பெற்றது.சனி பெயர்ச்சி அன்று உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்.
இந்நிலையில் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் டிசம்பர் 20 ஆம் தேதி புதன் கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.இதில் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.ஆலோசனை கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்,சப் கலெக்டர் ஜான்சன்,காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன்,கோவில்கள் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சந்திர பிரியங்கா:-
சனிப்பெயர்ச்சி அன்று பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய வைப்பதற்கான வழிமுறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதற்கு முன் நடைபெற்ற சனிப்பெயர்ச்சியில் கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் இவ்வருடத்தில் கூடுதல் வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் கடந்த சனிப்பெயர்ச்சியில் நடைபெற்ற குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சனி பெயர்ச்சி அன்று பக்தர்கள் வரிசையில் செல்லுதல்,காவலர்களைக் கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுதல்,வாகன போக்குவரத்து நிறுத்துமிடம்,தற்காலிக பேருந்து நிலையம்,பேரிக்கார்டுகள் அமைப்பது,கட்டுப்பாட்டு அறைகள் எங்கெங்கு அமைப்பது,பொதுமக்கள் வசதிக்காக மே ஹெல்ப் யூ ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
திருநள்ளாறு முழுவதும் செய்யப்பட்டுள்ள சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.திருநள்ளாறில் பொது மக்கள் நடமாடும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களே தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கும் கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டார்.
சனி பெயர்ச்சி அன்று பக்தர்களால் நடத்தப்படும் அன்னதான உணவுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து உணவு தர சோதனையை நடத்தப்படும்.மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ வசதி கொண்ட சுகாதார குழு தயார் நிலையில் இருக்கும்.
சனி பெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனம் செய்யும் பொழுது திருப்பதியில் கடைபிடிப்பது போல டிக்கெட்டில் தரிசன நேரம் குறித்து தெளிவாக பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டு தரிசனம் முறையை கையாளப்படும் என தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தன்னார்வலர்கள் கொண்டு வீல் சேர் மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.மேலும் மாற்றுத்திறனாளிகள் வசதியாக பேட்டரி கார்டு கொண்டு இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.திருநள்ளாறு கோவிலில் உள்ள ஆகம விதிமுறைகள் மற்றும் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல் படியே அர்ச்சனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.இதில் அரசியல் மற்றும் வெளிநபர் குறுக்கீடுகள் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க அண்டை மாவட்டங்களில் அரசு மூலம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் சனி பெயர்ச்சிக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில் அதற்குள் காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை திட்டத்தில் காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வரை பணிகள் விரைவில் முடிவடைந்தால் ரயில் போக்குவரத்து இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என அமைச்சர் சந்தர்ப்பியங்கா தெரிவித்தார்