அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்வதேச முதியோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசின் நலவழித்துறை காரைக்கால் மாவட்ட சுகாதார இயக்கம் அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்வதேச முதியோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் முதியோர்களுக்கான உடற்பயிற்சி செய்முறை பயிற்சி நேற்று நடைபெற்றது.
சுகாதார ஆய்வாளர் இளையதாசன் வரவேற்புரை ஆற்றினார்.மருத்துவ அதிகாரி அரவிந்த் தலைமை தாங்கினார்.சித்த மருத்துவர் மலர்விழி,இயன் மருத்துவர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ அதிகாரி அரவிந்த் பேசுகையில் அனைவரது குடும்பத்திலும் முதியோர் இருப்பார்கள்.தவிக்க விடாமல் ஆதரவளித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அக்., 1 ல் சர்வதேச முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
முதியோருக்கு சமவாய்ப்பு வழங்குதல் என்பது இந்த ஆண்டு மையக்கருத்து.இன்றைய சூழலில் முதியோருக்கு ஏற்படும் துன்பங்கள் சமூக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. லட்சக்கணக்கான முதியோர், ஆதரவின்றி தவித்து வருகின்றனர். உடலளவில் தளர்ந்த இவர்களை மனதளவில் தேற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இன்றைய உலகில் குடும்ப உறவுகள் என்பது முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு, பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க அவரவர் பிள்ளைகள் முன்வர வேண்டும் என இந்நாள் வலியுறுத்துகிறது என்று கூறினார்.
சித்த மருத்துவர் மலர்விழி முதியோர்களுக்கு கொள்ள வேண்டிய உணவு முறைகளையும் அதிகம் சாப்பிடக்கூடிய காய்கறி மற்றும் பழங்களை பற்றி விவரித்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முதியவர்களுக்கு பிசியோதெரபிஸ்ட் சரண்யா வீட்டில் செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை செய்முறை விளக்கம் செய்து பயிற்சி கொடுத்தார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு ஆகியவை பரிசோதனைக்கப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.