தம்பி மாரிமுத்து
Oct 09 2023
புதுச்சேரி அரசியல்
காரைக்காலில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை
-ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் புகார்
காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர் பணி நியமனத்தை செய்துதர அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனை நிரவி திருப்பட்டினம் தொகுதி செயலாளர் சு.விடுதலைக் கனல் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு சமர்ப்பித்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட கீழவாஞ்சூர் ஆசாரித் தெருவில் 250 மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 12 ஆசிரியர் பணியிடங்கள் இருந்தும், அங்கு பணியாற்றிய 2 ஆசிரியர்கள் இடமாற்றம் காரணமாக புதுச்சேரிக்கு சென்றனர். 2019-ல் அங்கு பணியாற்றிய ஒரு ஆசிரியர் புதுச்சேரிக்கு மாற்றலாகிச் சென்று விட்டார்.
அந்த ஆசிரியருக்கு பதில் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டும் போதிய ஆசிரியர்கள் இன்றி, அக்கிராமத்தின் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆசிரியர் நியமனம் என்ற பெயரில் ஒரு ஆசிரியரை நியமிக்க ஓராசிரியர் பள்ளி போல கல்வித்தரம் நீடிக்கிறது.
திருப்பட்டினம் அரசு மேனிலைப்பள்ளியில் 540 பிள்ளைகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் இருக்கிற 5 கழிப்பிடங்களும் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. அந்தக் கழிவறைகளை தூய்மை, பராமரிப்பு செய்ய ஊழியர்கள் அப்பள்ளியில் இல்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
வரப்போவது மழைக்காலம் என்பதால், திருப்பட்டினம் அரசு மேனிலைப்பள்ளியில் பராமரிப்பற்ற கழிவறைகளால் தொற்று பரவும் ஆபத்து இருப்பதை உணர்ந்து உரிய பணியாளர்கள் நியமனத்தை செய்ய வேண்டும்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நிரவி திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட மானாம்பேட்டை சாலையை அடியோடு தோண்டி, சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினர். அப்பணி இன்றுவரை முழுமை பெறவில்லை. அந்த சாலையில் தார் ஊற்றாமல், கரடு முரடான இந்த சாலை நடந்து போகவே லாயக்கற்று காணப்படுகிறது. இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
நெடுங்காடு-கோட்டுச்சேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலக்காசாக்குடி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி பாதுகாப்பு சுவர் இன்றி காணப்படுகிறது. பள்ளியை ஒட்டி குளம், கிணறு, வாய்க்கால் இருப்பதால், மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் அங்கு படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பாதுகாப்பு சுவரை கட்டி முடிக்க வேண்டும். மேலும், இப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் கூரை சேதமுற்று காணப்படுகிறது. இதை சீரமைத்து, அங்கு கம்பியூட்டர் வகுப்பை நிர்மாணிக்க வேண்டும்.
திருநள்ளாறை அடுத்த தேனூர் ப.சண்முகம் அரசு மேனிலைப்பள்ளியில் பவளவிழா கொண்டாடுகின்றனர். ஆனால், இப்பள்ளியில் படுக்கும் மாணவர்களுக்கு உருப்படியான கழிப்பிட வசதிகள் இல்லை. முதலில் இதை ஒழுங்கு செய்துவிட்டு, கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது நிரவி திருப்பட்டினம் தொகுதி செயலாளர் சு.விடுதலைக் கனல், திருப்பட்டினம் தொகுதி அமைப்பாளர் ப.சுரேஷ், தொகுதி அமைப்பாளர் லெனின், நெடுங்காடு தொகுதி துணை செயலாளர். சா.சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.