ஒரு கிராமத்து அதிசயம்.
---------------------------------------
கனவில் வந்து பலன் தரும் பத்ரகாளியம்மன்!
புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலிருந்து மேற்கில் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது மேலக்காசாக்குடி கிராமம். இந்த தெய்வீக கிராமத்தில் எட்டுத் திசைகளிலும் கிராம தேவதைகளின் கோயில்கள் அமைந்திருக்கின்றன. இந்த கிராமத்தைப் பொறுத்தவரை கிராமத்தின் நடுவில் எழுந்தருளியிருக்கிற அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன்தான் சகலமும்!
நீளும் வழக்குகளுக்கு வடக்கு நோக்கி அமைந்திருக்கும் இக்கோயிலின் காளியே நீதி மாதா. தீரா நோய்களுக்கு அவளே மருத்துவச்சி. வாழ்க்கையின் படிப்பினைகளுக்கு காளியே நிரந்தர பல்கலைக்கழகம். முழு நம்பிக்கையோடு வருபவர்களை அவள் ஒருபோதும் கைவிடுவதே இல்லை. சோதனைகள் அண்டாதபடி வலுவான கவசமாய் துணையை நிற்பது அவளது பேரருள்களில் ஒன்று.
மனம் முழுவதையும் அம்மனை நோக்கி குவித்து பிரார்த்திக்கும் பக்தர்களுக்கு ஆனந்த அனுபவங்கள் ஏராளம். தேடி வரும் பக்தர்கள் யாராயினும் அவர்களை தனது செயலாகவே இக்கோயிலின் அம்மன் பார்க்கிறாள். தன்னை தேடி வந்து தரிசித்து, தனது முகம் பார்த்து, மனம் விட்டுப் பேசுகிற பக்தர்களின் கனவில் அன்றிரவே ஸ்ரீ பத்ரகாளியம்மன் தோன்றுகிறாள்.
பக்தர்களின் கனவில் தோன்றி பிரச்னைக்கான தீர்வினைச் சொல்லி மறைகிறாள். இது இன்று நேற்றல்ல. பல நூற்றாண்டுகளாய் பக்தர்களின் பரவச அனுபவங்களின் நிரந்தர நம்பிக்கை! இக்கோயிலுக்கு இன்னார்தான் என்றில்லை. சர்வ மதத்தினரும் வருகின்றனர். அம்மனின் முகம் பார்த்து மனதில் இருக்கிற கஷ்டங்களைக் கூறுகின்றனர்.
அம்மனை எப்படி வழிபடவேண்டும்?
பக்தர்கள் காணிக்கை எதையும் எடுத்து வர வேண்டியதில்லை. வெறுங்கையுடன்கூட வரலாம். அம்மன் மீதுள்ள நம்பிக்கைதான் முக்கியம் என்கின்றனர் ஸ்ரீ பத்ரகாளியம்மனால் பலன் பெற்ற பக்தர்கள்.
குளித்து முடித்து, நேரடியாகவே கோயிலுக்கு வந்து விடலாம். மந்திரங்கள், உச்சாடனங்கள் தெரிந்தவர்கள்தான் வழிபடலாம் என்றில்லை. வாழ்க்கையில் முழு நம்பிக்கை மிக்க தாய், மகள், சகோதரி, தோழி, உறவு என்ற உரிமையுடன் அம்மனிடம் தங்களின் மனதில் இருக்கும் பிரச்னைகளை நம்பிக்கையுடன் கூறலாம்.
மருத்துவரிடம், நீதிபதியிடம் உண்மையைக் கூறுகிற அசையா நம்பிக்கையை மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அம்மனை, முகத்துக்கு முகம் பார்த்து, மனதில் உள்ளதை ஒன்று விடாமல் சொல்ல வேண்டும்.
உடனடியாக கோயிலிலேயே பல்லி சப்தத்தின் அடையாளத்துடன் அருள் பாலிக்கிறாள். அன்றிரவே பக்தர்களின் மனதில் அமர்ந்து கனவாக மலர்கிறாள். கோரிய வேண்டுதல்களுக்கு உரிய தீர்வினை தெளிவாகக் கூறிவிடுகிறாள்.
திருமணத்துக்குத் தயாராகிற பெண்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். இங்குள்ள அம்மனை தரிசித்தால், புகுந்த வீட்டில் விரும்பிய சூழல் தானாகவே உருவாகிவிடும். பலர், தங்களின் கோரிக்கைகளைக் காகிதத்தில் எழுதி, அம்மனின் பாதத்தில் வைக்கின்றனர். மறு வாரமே இதற்குத் தீர்வு கிடைத்துவிடுகிறது என்றும் கூறுகின்றனர்.
மனதை அரித்துக் கொண்டிருக்கிற உறுத்தல், குற்ற உணர்வு, சந்தேகம், அச்சம், குழப்பம், அனைத்துக்கும் இத்திருத்தலத்தில் தீர்வு உண்டு. நாள்பட்ட நோய்கள் மற்றும் குடும்பக் குழப்பங்களுக்கு ஸ்ரீ பத்ரகாளியம்மன் தீர்வு தருவுவதாக நம்பிக்கை உண்டு.
தங்களின் மனதில் அமர்ந்து கனவில் தோன்றி அனைத்து பிரச்சனைகளுக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் தீர்வு கூறுவதாக ஒவ்வொரு பக்தர்களும் பரவசத்துடன் தெரிவிக்கின்றனர். வெறும் வார்த்தைகளில் அம்மனின் கருணையையும், பேரருளையும், பெருவரங்களையும் சொல்லிவிட முடியாது. நேரடி அனுபவங்களே இதை உணர்த்த முடியும்.
ஸ்ரீ பத்ரகாளியிடம் கோரிக்கை நிறைவேறியதும் பாலாபிஷேகம், காவடி, பாடை கட்டுதல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, பட்டுப்புடவை, மலர் அலங்காரம், காய்கனி அலங்காரம், அன்னதானம் செய்து குளிர வைத்து அழகு பார்க்கின்றனர்.
பலநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, குடும்ப உறவுகளுக்குள் தீர்க்கவே முடியாத பல விவகாரங்களுக்கு இந்த அம்மன் தீர்வு கூறி வருகிறாள். தேடி வரும் பக்தர்கள் கையுறைப் பொருட்களுடன்தான் வந்தாக வேண்டும் என்பதில்லை. நேராக நினைத்த மாத்திரத்தில் கிளம்பி வந்து தரிசிப்பவர்களே அதிகம். தரிசித்த நொடியிலிருந்தே அம்மனின் பேரருள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அசுரபலத்தைக் கொடுத்து விடுகிறது. எதிரிகளின் சதி அடையாளமே தெரியாமல் அழிந்து விடுகிறது. அத்தனைக்கும் உடனடி தீர்வு அவரவர் மனதிலேயே கிடைக்கிறது.
அம்மனை தரிசித்தபின் ஒவ்வொரு இரவும் அம்மனின் திருமுகத்தை மனதில் ஏந்தி, வணங்கி உறங்க வேண்டும். அன்றிரவே கனவில் தோன்றும் அம்மன் சகல பிரச்னைகளுக்கும் தீர்வு கூறும் அற்புதத்தை பக்தர்கள் பரவச உணர்வுடன் பகிர்ந்தபடி இருக்கின்றனர். அம்மனிடம் முகம் பார்த்துக் கோரிய பிரார்த்தனைகள், கோரிக்கைகள், வேண்டுதல்கள் மின்னல் வேகத்தில் நிறைவேறும்.
அதன்பின்னர் குடும்பத்துடன் இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அன்னதானம், மலரலங்காரம், அர்ச்சனை, ஆராதனை, யாகம், வழிபாடு என்று அவரவர் சக்திக்கேற்ப அம்மனை குளிர்விக்கின்றனர்.
வருடம் முழுவதும், தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்கிற பக்தர்கள் இத்திருக்கோயிலில் சித்திரை மாதம் நடக்கிற திருவிழாவில் பங்கேற்பார்கள்.
அசைவ உணவை ஒதுக்கி, கையில் மஞ்சள் கயிற்றைக் கட்டி நோன்பிருப்பார்கள். கடாவெட்டு, உற்சவம், அபிஷேகம், அமுது படையலால் ஆனந்த முகம் கொண்டிருக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மனை கண் குளிர தரிசிப்பார்கள். அம்மனின் பேரருள் உடல்,மனம் இரண்டிலும் நிரம்பும் பரவச அனுபவத்தைப் பெற்றுச் செல்வார்கள். ஸ்ரீ பத்ரகாளியம்மனை எந்த நாளிலும் தரிசிக்கலாம்.
தரிசன விவரங்களுக்கு:
எப்படி வருவது?
ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து திருக்கடையூர் வழியாகவும், பெங்களூரிலிருந்து கோவை, திருச்சி வழியாகவும், மதுரையிலிருந்து நாகப்பட்டினம், திருவாரூர் வழியாகவும் வரலாம்.
கோயிலின் இருப்பிடம்:
திருநள்ளாறிலிருந்து வடக்கில் 5 கிமீ தொலைவிலும், காரைக்காலிலிருந்து 5 கி,மீ தொலைவிலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. காரைக்காலிலிருந்து கும்பகோணம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அடிக்கடி பேருந்து, டாடா ஏசி, ஆட்டோ போக்குவரத்தும் இருக்கிறது.
மேலும், விவரங்களுக்கு:
வாட்சப்: 9442328111