காரைக்காலில்
கல்லூரிக்குள் பெண் புகுந்து
காவலருக்கு தடியடி தாக்கு
காரைக்காலில் வேளாண் கல்லூரிக்குள் புகுந்த பெண், அங்கு பணியிலிருந்த செக்யூரிட்டியை தடியால் தாக்கிய சம்பவம் கல்லூரி வளாகத்துக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநள்ளாறை அடுத்த செருமாவிலங்கையில் இயங்கிவரும் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சந்திரசேகரன்(56) என்பவர் செக்யூரிட்டி பணியிலிருந்தார். கல்லூரி மேற்கு வளாகத்தின் பழத்தோட்டத்தில் அரியவகை மரங்கள், செடிகள் விதைகள், நாற்றுகள், மரக்கன்றுகள் உள்ளன.
இங்கு சுரக்குடி துணைமின் நிலையம் அருகில் வசிக்கும் செந்தாமரை என்பவர் மாடுகளைக் கொண்டு வந்து மேய்த்ததை சந்திரசேகரன் பலமுறை கண்டித்துள்ளார். எனினும் அதைக் கேட்காமல் கடந்த 2-ம் தேதி தனது மாடுகளை செந்தாமரை கொண்டு வந்து மேய்த்துள்ளார்.
மாடுகள் பழச்செடிகளை மேய்வதைக் கண்ட சந்திரசேகரன் ஓடி வந்துள்ளார். ''பழ மரங்கள், தென்னங்கன்றுகள், அலங்காரச் செடிகளில் இப்படி மேய்கிறாயே? இனி இவ்வாறு மேய்த்தால் போலீசில் புகார் செய்துவிடுவேன். கால்நடைகளுடன் வளாகத்தை விட்டு வெளியேறி விடு " என்று எச்சரித்தார். அதை அலட்சியப்படுத்திய செந்தாமரை கேவலமான வார்த்தைகளால் சந்திரசேகரனைத் திட்டினார்.
அப்போது செந்தாமரை அங்கு கிடந்த ஒரு தடியை எடுத்து சந்திரசேகரனை சரமரியாகத் தாக்கினார். இத்தாக்குதலில் சந்திரசேகரனின் கைகள், நெற்றியில் காயம் ஏற்பட்டது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சந்திரசேகரன் கல்லூரியின் டீன் டாக்டர் புஷ்பராஜிடம் இதுகுறித்து தெரிவித்தார்.
திருநள்ளாறு காவல் நிலையத்தில் சமயம் குறித்து கல்லூரி டீன் டாக்டர் புஷ்பராஜ் புகாரளித்தார். சம்பவம் குறித்து ஆய்வாளர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் செந்தாமரை மீது வழக்கு பதிவு செய்தனர். வேளாண் கல்லூரி வளாகத்துக்குள் அத்து மீறி நுழைந்து பாதுகாவலரை பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.