வாலிபர் மீது தாக்குதல்
மூன்று பேர் கைது
நிரவியில் அதிவேகத்தில் பைக்கில் சென்றதைத் தட்டிக் கேட்ட வாலிபரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
நிரவி மேல ஓடுதுறை அந்தோனியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ்(28), இவர் நாகூர் மெயின் ரோட்டில் இரும்பு விற்பனைக் கடை நடத்தி வருகிறார். நேற்று நிரவி காமராஜர் தெருவைச் சேர்ந்த சுகு என்கிற சிலம்பரசன்(25), புதுச்சேரி கொசப்பாளையம் முகேஷ்(22), கோட்டுச்சேரி ஜீவா நகரைச் சேர்ந்த நிஷாகன்(24) மூவரும் ஒரே பைக்கில் இவரது தெரு வழியாக அதிவேகத்தில் சென்றனர்.
சற்று நேரத்தில் அதே வேகத்தில் திரும்பி, முல்லையற்றங்கரை வழியாக சென்றனர். அவர்கள் மூவரும் முல்லையற்றங்கரை ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் ஸ்டீபன்ராஜ் "சின்ன தெருவில் இவ்வளவு வேகமாக பைக்கில் செல்கிறீர்கள். விளையாடும் குழந்தைகள் மீது மோதினால் என்னாகும்?" என்று கேட்டார்.
அதற்க்கு ஸ்டீபன்ராஜை அருவருக்கத்தக்க வகையில் மூவரும் திட்டினார். திடீரென சுகு கையால் கன்னத்திலும், முதுகிலும் தாக்கினார். உடனிருந்த முகேஷ், நிஷாகன் இருவரும் ஸ்டீபன்ராஜை கீழே தள்ளி இடது பக்க தோள்பட்டையில் கையாலும், காலாலும் மிதித்தனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து ஓடி வந்த சிலர் ஸ்டீபன்ராஜை மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ஸ்டீபன்ராஜ் நிரவி காவல் நிலையத்தில் புகாரளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்படி ஸ்டீபன்ராஜை தாக்கிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.