Thursday 21 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

புதுச்சேரி முதல்வர் பதவிக்கு குறி!
புதுச்சேரி முதல்வர் பதவிக்கு குறி!
தம்பி மாரிமுத்து Nov 18 2024 புதுச்சேரி அரசியல்

புதுச்சேரி முதல்வர் பதவிக்கு குறி!

புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதியில் பிரபல லாட்டரி அதிபர் கோவை மார்ட்டினின் மகன் சார்லஸின் அரசியல் பிரவேசம் புதுச்சேரி ஆளும் அரசியல் கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், மற்றும் பாஜகவை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது . 

தமிழகத்தின் பிரபல லாட்டரி அதிபர் கோவை மார்ட்டின், தனது மகன் சார்லஸையும் பாஜகவில் சேர்த்தார்.  இருந்தும் நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 5 நாட்களாக மார்டீனின் வீடு,  கல்லூரி, அலுவலகம், உறவினர்களின் வீடுகளில்  அலுவலகங்களில்  அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி ரூ.8 கோடியே 80 லட்சத்தை கைப்பற்றினர். 

இதனால் எரிச்சலடைந்த மார்ட்டின், தனது மகன் சார்லசை புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக அரசியலில் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாயின.

நடிகர் விஜயின் அரசியலுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஞானகுருவாக உள்ளார். கட்சிப் பெயர், சின்னம், கட்சிக்கொடி முடிவுகளில் முதல்வர் ரங்கசாமியின் ஆலோசனைகளை நடிகர் விஜய் கேட்டுள்ளார்.

விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கு கழகத்துக்கு முதல்வர் ரங்கசாமியின் நம்பிக்கைக்குரிய முன்னாள் எம்.எல்.ஏ., புஸ்ஸி ஆனந்த்  பொதுச் செயலாளராக உள்ளார். 

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக்கு கழகத்துடன் களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் லாட்டரி அதிபர் கோவை மார்ட்டின், புதுச்சேரியில் தனது முந்தைய லாட்டரி தொழில் கூட்டாளி ஜான்குமார் எம்.எல்.ஏ மூலம், முதல்வர் ரங்கசாமிக்கு எதிரான பாஜக மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைத்துள்ளார்.

புதுச்சேரியில் வரும் 2025 ஜனவரியில் தனது மகன் சார்லஸ் தொடங்கவிருக்கிற புதிய கட்சியில் மேற்படி எம்.எல்.ஏக்களை இணைக்கவும் மார்ட்டின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது . 

இதை உறுதி செய்வதைப்போல, ஜான்குமார் எம். எல். ஏ., தலைமையில் நடந்த மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் லாட்டரி அதிபர் மார்டீனின் மகன் சார்லஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மற்றும் உள்துறை அமைச்சர் நமசிவாயத்துக்கு எதிராக டெல்லிவரை போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு ஜான்குமார், சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாசா அசோக் இவ்விழாவில் பங்கேற்றனர்.

விழா மேடையில் சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் தொழிலதிபர் சார்லஸின் காதில் ஏதோ கூறினார். பின்னர், தடாலடியாக சார்லஸின் கால்களைத் தொட்டு வணங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

 புதுச்சேரி பாஜகவில் ஏற்பட்டுள்ள பிளவின் அறிகுறிதான், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் லாட்டரி அதிபர் மார்டீனின் மகன் சார்லசை பிரவேசிக்கச் செய்திருக்கிறது.

புதுச்சேரியில் தனிக்கட்சி தொடங்கி சில எம்.எல்.ஏக்களுடன் அமைச்சர் பதவி பெறுகிற பவர் பாலிடிக்ஸ் கலாச்சாரம் கடந்த 50 வருடங்களாகவே  நீடிக்கிறது .

  2026 தேர்தலுக்கு முன்பு சார்லசை புதுச்சேரி அரசியலில் களமிறக்க வசதியாக ஜான்குமார் தனது காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை முன்னதாகவே ராஜினாமா செய்யக்கூடும் என அத்தொகுதி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது .  

காமராஜர் நகர் தொகுதியில் தொழிலதிபர் சார்லஸ் போட்டியிட்டால் , அவரை எதிர்த்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமியை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

இதை உறுதி செய்வதைப்போல, காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட நாராயணசாமிக்கு உரிமை இருக்கிறது என புதுச்சேரி  காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்த கருத்தும் புதுச்சேரியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.