புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி வழக்கில் தலைமறைவு குற்றவாளியான ஜேசிபி ஆனந்தின் நிலைமை குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் பல கோடி மதிப்புள்ள ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நிலத்தை மனைகளாக்கி விற்ற வழக்கில் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன், சர்வேயர் ரேணுகாதேவி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பெயரைப் பயன்படுத்தி காரைக்கால் வடக்குத் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி ஆனந்த் , கோயில் நிலத்தை வீட்டு மனைகளாக்கி தன்னை வரைபடம் செய்துதர வற்புறுத்தியதாக சர்வேயர் ரேணுகாதேவி போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
கோயில் நிலா மோசடி வழக்கு பதிவாகி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தலைமறைவான என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஆனந்தகுமார் என்கிற ஜேசிபி ஆனந்தை போலீசார் கைது செய்வதில் தாமதம் நீடிக்கிறது.
ஜேசிபி ஆனந்தை கைது செய்வதில் போலீசாரின் தாமதம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஜேசிபி ஆனந்தை ஆளுங்கட்சியினர் மேட்டுப்பாளையத்தில் ஒளித்து வைத்துள்ளனர்.
ஜேசிபி ஆனந்த் கைதானால், இவ்வழக்கில் அமைச்சர்கள், சர்வகட்சி அரசியல் புள்ளிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் தொடர்பு அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயில் நிலம் விற்ற மோசடிப் பணம் ரூ.5.5 கோடி ரொக்கம் மதுபான வியாபாரி ஒருவரிடம் தரப்பட்டிருக்கிறது. அந்த பணம் சிந்தாமல், சிதறாமல் புதுச்சேரியின் முக்கிய புள்ளியின் கைக்குப் போயிருக்கிறது. இதனால், ஜேசிபி ஆனந்தை அந்த முக்கிய புள்ளி புதுச்சேரி தமிழக எல்லையில் உள்ள பண்ணை வீடு, கெஸ்ட் ஹவுஸ் என்று மாற்றி மாறி தங்க வைத்திருப்பதாகவும் துகள்கள் வெளியாயின.
கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி வழக்கு பதிவு செய்த போலீசார் அப்போதே ஜேசிபி ஆனந்தைக் கைது செய்திருக்கலாம். ஜேசிபி ஆனந்தை அவரிடமிருந்து மோசடிப் பணத்தையும் வாங்கியிருக்கலாம். கைக்கெட்டும் தொலைவில் ஜேசிபி ஆனந்த் இருந்தும் அவரை ஏன் கைது செய்யவில்லை?
ஜேசிபி ஆனந்த் போலீசாரிடம் தப்பி, காரில் சென்னை தேனாம்பேட்டையில் இறங்கியதாக கார் டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தும் போலீசார் ஏன் அசைந்து தரவில்லை? குறிப்பிட்ட அந்த கார் டிரைவரை போலீசார் வழக்கில் ஏன் சேர்க்கவில்லை.
ஜேசிபி ஆனந்த் பணத்துக்காக சித்திரவதை செய்யப்பட்டார் என்றும், அவரது நிலைமை வெளியிடப்படவில்லை என்றும் புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜேசிபி ஆனந்த் உண்மையில் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?
உண்மையில் உயிரோடு இருக்கிறார் என்றால் அவரை போலீசார் இன்னும் எதற்காக நீதி மன்றத்தில் ஆஜர் செய்யவில்லை? இக்கேள்விகளுக்கு புதுச்சேரி மாநில காவல்துறை இதுவரை வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர்.
செப்டம்பர் 3 -ஆம் தேதி வழக்கு பதிவு செய்து, ஜேசிபி ஆனந்த் தலைமறைவு குற்றவாளி என்று போஸ்டரை ஒட்டி, அமைதி காக்கின்றனர்.
ஜேசிபி ஆனந்த் இருக்குமிடம் உண்மையில் தெரியவில்லை என்றால், அவரது குடும்பத்தினர் உயர்நீதி மன்றத்தில் இன்னும் ஏன் ஆட்கொணர்வு மனு போடவில்லை? ஜேசிபி ஆனந்தை சுறுசுறுப்பாக தேடிய சிறப்பு அதிரடிப்படையை யார் சொல்லி அவசரமாக கலைத்தார்கள்?
போலீசாரின் இந்த சதுரங்க விளையாட்டை "ஸ்ட்ரிக்ட் ஆப்பீசர்" என்று வர்ணிக்கப்படும் கவர்னர் கைலாஷ் நாதன் எதற்காக இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்?
காரைக்கால் மாவட்டத்தின் இந்த சென்ஸிட்டிவான வழக்கை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர முடியுமா? காரைக்கால் மாவட்டத்தில் இன்று முதுநிலை கண்காணிப்பாளராக பணியமர்ந்த லெட்சுமி சௌஜன்யா, இவ்வழக்கை எப்படிக் கையாளப்போகிறார்?
ஜேசிபி ஆனந்த் குறித்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், மர்மங்களுக்கும் இளம் ஐபிஎஸ் அதிகாரி லெட்சுமி சௌஜன்யா விடை காண்பாரா? இக்கேள்விகள்தான் காரைக்கால் மாவட்ட மக்கள் மத்தியில் அலையடித்துக் கொண்டிருக்கிறது.
காரைக்கால் கோயில் நில மோசடிscript :Thambi Marimuthu .