புதுச்சேரியில் முந்திரி வியாபாரியிடமிருந்து ஓர்ளயன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிட்லா சத்யநாராயணா ரூபாய் 22 லட்சத்தை மிரட்டிப் பறித்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் புதுச்சேரி காவல்துறை மீதான நம்பிக்கை, மரியாதையை வெகுவாகக் குலைத்திருக்கிறது.
முந்திரி வியாபாரியின் பணம் அவ்வளவு சீக்கிரம் அவரது கைக்கு கிடைக்கவில்லை. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் தலையீட்டுக்குப் பிறகே இந்தப் பணம் முந்திரி வியாபாரிக்கு சிந்தாமல், சிதறாமல் கிடைத்திருக்கிறது .
பாஜக எம்.எல்.ஏவுடன் பணப் பங்கீடும் ஆளும் அரசின் யோக்கியம்சத்தை ஜனங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. பணப்பறிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான ஆய்வாளர் கிட்லா சத்யநாராயணா புதுச்சேரி காவல்துறையின் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
பணப்பறிப்பு சம்பவத்தில் பொதுமக்களில் யாராவது சிக்கியிருந்தால் அவர்களின் கதி என்னவாக இருக்கும். இந்நேரம் காவல்நிலையத்தில் சகட்டு மேனிக்கு அடித்துத் துவைத்திருப்பார்கள். குற்றவாளியை தரையில் அமர வைத்து பத்திரிகையாளர் சந்திப்பை பகட்டாக நடத்தியிருப்பார்கள் .
ஒருசர்வதேச குற்றவாளியைப் போல நீதி மன்றத்தில் ஆஜர் செய்திருப்பார்கள். ஆனால், இந்தக் குற்றத்தைச் செய்தது புதுச்சேரி காவல் ஆய்வாளர், இந்த கேவலமான செயலுக்கு சமரச சாட்சியாக இருந்தது ஒரு பாஜக எம். எல். ஏ என்பது குறிப்பிடத்தக்க விஷயம் .
பணப்பறிப்பு குற்றச்சாட்டுக்கு வேறு ஒரு ஆய்வாளர் சிக்கியிருந்தால் அவரை தற்காலிக பதவி நீக்கம் செய்திருப்பார்கள். புதுச்சேரியின் மற்ற பிராந்தியங்களான மாஹிக்கோ, ஏனத்துக்கோ இடமாற்றம் செய்திருப்பார்கள். காவல்துறை விசாரணையும் ஆரம்பித்திருப்பார்கள்.
ஆனால்,புதுச்சேரியில் சென்சிட்டிவான ஓர்ளயன்பேட்டை காவல் நிலையத்தில், அங்கு ஆய்வாளராக வேலை பார்த்த ஆய்வாளர் கிட்லா சத்யநாராயணா செய்த வழிப்பறி சம்பவம் ஒட்டுமொத்த புதுச்சேரிக்கே தெரிந்த பிறகு, குற்றவாளியை கைது செய்திருக்க வேண்டாமா? ஆய்வாளர் கிட்லா சத்யநாராயணா, அவருக்கு உடந்தையாக இருந்த கீழ்நிலைக் காவலர்கள் அனைவரையும் பாரபட்சமின்றி நீதி மன்றத்தில் ஆஜர் செய்வதுதானே முறை?
மாறாக அவரை பக்கத்து தெருவிலிருக்கிற ஆயுதப்படைக்கு மாற்றுவதற்கு என்ன காரணம்? இந்த பணப்பறிப்பு சம்பவத்தில் வேறு உயரதிகாரிகள் யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்கிற கேள்வி சாமான்ய பொதுமக்களின் மனங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
பாம்பும் சாகாமல், தடியும் உடையாமல் புதுச்சேரி காவல் தலைமையகம் எடுத்திருக்கிற இந்த நடவடிக்கை புதுச்சேரி சட்டம் ஒழுங்கு காவல்துறையின் நெறிமுறைக்கு பெரிய கரும்புள்ளியாகி இருக்கிறது. சாரம் பகுதியில் ஒரு கடைக்குள் ரவுடிகள் அடாவடியாக நுழைந்து, வேலைபார்க்கும் பெண்களிடம் பேசிய ஆபாசமாக வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பரவின.
புதுச்சேரி மீதான அபிப்பிராயத்தை அதலபாதாளத்துக்குத் தள்ளிய அந்த ரவுடி மன்னிப்பு கேட்டதாக ஒரு ட்ட வீடியோவும் வெளியானது. இந்த ரவுடிக்கும், முந்திரி வியாபாரியிடம் வழிப்பறி செய்த ஆய்வாளருக்கும் சீருடை ஒன்றுதான் வித்தியாசம்.
புதுச்சேரிக்கு சட்டம் ஒழுங்குக்கு இந்த வாரம்தான் துடிப்பான ஒரு முதுநிலைக் கண்காணிப்பாளர் கலைவாணன் IPS பொறுப்பேற்றிருக்கிறார். இவரது பணியமர்வால் பொதுமக்களின் உணர்ந்த சந்தோஷத்தைக் குலைப்பதைப்போல் வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆய்வாளரை வெறும் இடமாற்றம் மட்டுமே தண்டித்து விடுமா?
பணம்தான் முந்திரி வியாபாரிக்கு கிடைத்துவிட்டது. பிரச்னை ஓய்ந்தது என்று சாதாரண குடிமகனை காவல்துறை விடுவித்து விடுமா? கைப்பற்றப்பட்ட பணத்துடன், குற்றவாளியின் கைரேகையை கருப்பு மசியில் துவைத்து, வழக்குப் பதிவு செய்து, பணத்துடன் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்துவதுதானே நடைமுறை?
யாருக்காகவோ புதுச்சேரி காவல்துறை தனக்குத்தானே எழுதிக் கொண்ட கருப்பு வரலாற்றை எப்படி திருத்தியெழுதப் போகிறது? வெளிப்படையான அரசு என்று தன்னை கூறிக் கொள்கிற புதுச்சேரி அரசு பொதுமக்களுக்கு பொறுப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
-கட்டுரை: தம்பி மாரிமுத்து