காரைக்காலில் கடும் மழை காரணமாக பாதுகாப்பு கருதி மயில்கள் வயல்வெளியை ஒட்டிய தோப்புகளில் தஞ்சமடைந்து வருகின்றன.
காரைக்கால் மாவட்டத்தில் பருவமழை பெய்து வருகிறது. வெயில், மேகமூட்டம் மாறிமாறி காணப்பட்டபோதும், மழை தொடங்கினால் ஒரு மணி நேரத்துக்குள் குறையாமல் கொட்டித் தீர்க்கிறது. மழையின் நடுவே பொதுமக்கள் விவசாயம், வர்த்தகம், அன்றாட பணிகளைத் தொடர்கின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் ஆற்றோர கரைகள், தென்னந்தோப்புகள், தனிமையிலிருக்கும் காடுகளில் தங்கியுள்ளன. விவசாய காலம் என்பதால், அவற்றுக்கு போதுமான உணவும் கிடைக்கின்றன. தற்போது கடும் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதால், மயில்களுக்கு உணவும், இருப்பிடமும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
எனவே மயில்கள் தங்களின் வசிப்பிடங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக பறந்து வருகின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத விடியற்காலையில் சாலையின் நடுவே நடந்து செல்கின்றன. வாகனப் போக்குவரத்து தொடங்கியதும் அவை வயல்வெளியை ஒட்டிய தோப்புகளில் தஞ்சமடைந்து வருகின்றன. மயில்கள் மழையில் நனைவதும், ஆடுவதும், அகல்வதுமாய் இருக்கும் ரம்மியமான காட்சிகளை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.