காரைக்காலில்
பைக்-மொபட் மோதலால்
ஆசிரியை பற்கள் தெறிப்பு
காரைக்காலில் வாலிபரின் பைக் மோதி, மொபட்டில் இருவரை அமர்த்தி அழைத்துச் சென்ற ஆசிரியையின் முன்பற்கள் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரைக்காலில் ஒப்பிலாமணியர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருபவர் இவரது மனைவி பாலசுபலட்சுமி (39) நேற்று முன்தினம் காரைக்கால் காமராஜர் சாலையில் பெட்ரோல் பங்கில் மொபட்டுக்கு பெட்ரோல் போட்டுவிட்டு புறப்பட்டார். மொபட்டில் பின் சீட்டில் மகன் திவ்யேஷ் கார்த்திக்(15),உறவினர் மகன் சரவணைப்பிரியன்(17) இருவரும் அமர்ந்துள்ளார்.
மொபட்டின் இண்டிகேட்டரைப் போட்டபடி வலது பக்கமாக கண்ணாடியார் வீதியில் பாலசுபலட்சுமி திரும்பினார். அப்போது, காரைக்கால் பாரீஸ் நகரில் வசிக்கும் அர்ஷாத்(19) அதிவேகத்தில் பைக்கில் வந்து மோதினார். மொபட்டில் பயணித்த மூவரும் சாலையில் விழுந்தனர்.
இவ்விபத்தில் பாலசுபலட்சுமியின் முன் பற்கள் இரண்டு உடைந்தன. மூக்கு, கை,கால் போன்ற இடங்களில் காயமும் ஏற்பட்டது. உடன் மொபட்டில் அமர்ந்திருந்த இருவரும் காயமின்றி தப்பினர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் பாலசுபலட்சுமியை ஆட்டோவில் ஏற்றி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விபத்து குறித்து பாலசுபலட்சுமியின் புகார் மீது வழக்கு பதிவு செய்த காரைக்கால் போக்குவரத்து போலீசார் பைக்கை அஜாக்கிரதையாக ஒட்டி விபத்தை ஏற்படுத்திய அர்ஷாத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.