காரைக்காலில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள்.
மழைக்கால நோய் தாக்குதலில் இருந்து,மழைநீர் தேக்கத்தால் உண்டாகும் கொசு உற்பத்தியின் மூலம் உண்டாகும் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி காரைக்கால் மாவட்டம் முழுவதுமாக காரைக்கால் நலவழித்துறை மூலம் மழைக்காலங்களில் உண்டாகும் நோய்களை தடுக்கவும்,குறிப்பாக மழைக்காலங்களில் கொசுவினால் உண்டாகும் டெங்கு,சிக்குன்குனியா நோய்களை தடுக்க தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர். பருவமழை தொடங்கும் முன்பே டெங்கு காய்ச்சல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகிறது.இதனை தொடர்ந்து காரைக்கால் அடுத்த கும்சைன் கட்டளை பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த விழிப்புணர்வு முகாமில் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர். சிவராஜ்குமார் கலந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று டெங்கு விழிப்புணர்வை பற்றியும் கொசு ஒழிப்பு பற்றியும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கினார்.இதில் நலவழித்துறை நோய் தடுப்பு திட்ட அதிகாரி டாக்டர்.தேனாம்பிகை,மாவட்ட மலேரியா தொழில்நுட்ப உதவியாளர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டு அப்பகுதியில் கொசு புழுக்கள் உள்ளதா என்றும் டெங்கு கொசுக்கள் உருவாகும் காரணிகளை எவ்வாறு அழிக்க வேண்டும் எனவும் மக்களுக்கு எடுத்துக் கூறினர்