நெடுங்காட்டை அடுத்த கீழபொன்பற்றியில் புதுச்சேரி அரசின் பாசிக் போர் வெல் பூட்டப்பட்டதால், பாசன நீரின்றி பயிர்கள் வடிவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
நெடுங்காட்டை அடுத்த கீழ பொன்பற்றி கிராமத்தில் 50-க்கும் ஏற்பட்ட வயல் பரப்பில் விவசாயிகள் நேரடி மற்றும் சம்பா நடவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். காவிரி நீர் வரத்தின்மையால் கருகும் பயிர்களுக்காக வேளாண்துறை மூலம் நிறுவப்பட்ட பாசிக் போர்வெல் அங்கு உள்ளது.
ஆற்றுப்பாசனம் இல்லாத நெருக்கடியான நேரத்தில் இந்த பாசிக் போர்வெல் மூலமாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தின் விவசாயிகள் சம்பா நேரடி நெல் விதைப்பை செய்துள்ளனர். பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில், சாகுபடிநீர் இல்லாததால், பாசிக் போர்வெல்லில் தண்ணீருக்காக கட்டணத்தை செலுத்தியிருந்தனர்.
ஆனால் குறிப்பிட்ட மேல பொன்பற்றி பாசிக் போர்வெல் பூட்டப்பட்டிருந்தால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். போர்வெல்லை நிர்வகிக்கிற போஸ் என்பவர் குறிப்பிட்ட சிலருக்கு சாதகமாக செயல்படுவதாகவும், இரவு நேரங்களில் அவர்களுக்கு போர்வெல்லை இயக்கி வந்ததும் தெரிந்தது.
இதுகுறித்து கேட்டபோது சரிவர பதில் சொல்லாததால், காரைக்கால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்துள்ளனர். உள்ளூர் அரசியல் பிரச்னையால் போர்வெல் சாவியை வைத்துக் கொண்டு தங்களை அலைக்கழிப்பதாகா விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், கருகும் நெற்பயிரைக் காப்பாற்ற வேளாண் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டனர்.