மேலக்காசாக்குடியில் இயங்கும் குளோரைடு ஆலையிலிருந்து விவசாய நிலங்களில் பாசன வாய்க்கால்கள் மூலம் கழிவுநீரை திறந்து விடுவதால், விவசாயம் பாதிக்கப்படுவதாக அக்கிராம விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

நெடுங்காட்டை அடுத்த மேலக்காசாக்குடி வடபாதி பகுதியில் வைகை குளோரைடு என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. தீப்பெட்டி, பட்டாசு, வெடிப் பொருளுக்கான மூலப்பொருள் இந்த ஆலையில் தயாரிக்கப்படுவதால் கிராமத்தின் நடுவில் அமைய கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் ஆலைக்கழிவுகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும். தொழிலாளர்களின் உடல் நலத்தில் கவனம் மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஆலைக்கு அரசு அனுமதி வழங்கியது.
சில வருடங்களுக்கு முன்பு இந்த ஆலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்ததால் இந்தத் தீவிபத்து, கரும்புகை ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரசாயனப் புகை, கந்தக நெடி பரவி மூச்சுத் திணறலால் மக்கள் அவதிப்பட்டனர். ஆலையில் வேலைபார்த்த தொழிலாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். அச்சம் காரணமாக ஆலையை மூடவேண்டும் என்று கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவில் நடைபெற்ற சாலை மறியல் மற்றும் ஆலை முற்றுகைப் போராட்டத்தில் கிராம மக்களுடன் தொகுதி எம்.எல்.ஏவான சந்திர பிரியங்காவும் கலந்து கொண்டார். அதன்பின் வருவாய், தொழிலாளர்துறை, தொழிற்சாலை அதிகாரிகள் அந்த ஆலையை ஆய்வு செய்தனர். பல்வேறு நிபந்தனைகளுக்குப் பிறகு வைகை குளோரைடு தொழிற்சாலை மீண்டும் இயக்க அதிகாரிகள் அனுமதி தந்தனர்.

இத் தொழிற்சாலையில் பாய்லர்கள் வெடிப்பது, தீபிடித்து எரிவது போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து தற்போது ஆலைக் கழிவுகளை வேளாண் நிலங்களுக்கு பாசனம் செய்யும் வாய்க்கால்களில் திறந்து விடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆலையிலிருந்து நீர்மமாக கசிந்து வெளியேறும் கழிவு ஆளை வளாகத்துக்குள் பழுப்பு நிறத்தில் தேங்கியுள்ளது. இதை முறைப்படி சுத்திகரிக்க வேண்டும்.
ஆனால், பழுப்பு நிறத்தில் வடபாதி வடிவாய்க்காலை ஒட்டிய ஆலை வளாகத்துக்குள் தேங்கி நிற்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால், இந்தக் கழிவை வாய்க்காலில் அவ்வப்போது திறந்து விடுவதாக வாய்க்கால் நீரின் நிறத்தை சுட்டிக்காட்டி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த வடிவாய்க்கால் வாஞ்சியாறிலிருந்து பிரிந்து வடபாதி, வடமட்டம், அகரம், தலையானி வாய்க்கால், செட்டிகுளம், காஞ்சிபுரம் கோயில்பத்து உள்ளிட்ட சுமார் 500 ஹெக்டேர் நிலப்பரப்புக்கு பாசன நீரை வழங்குகிறது. இப்படி விளைநிலங்களுக்கு செல்லும் பாசன வாய்க்கால்களில் கழிவு நீரை ஆளை நிர்வாகம் திறந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மெளகாசாக்குடி கிராமத்தில் ஆளை நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் கண்டன போஸ்டரையும் ஒட்டியுள்ளனர். கழிவு நீர் விவசாய வடிகால்களில் கலப்பதால் விவசாய நிலங்களில் பயிர் செய்கின்ற பயிர்கள் கருகியும், மகசூல் பாதிக்கப்படுவதோடு விளைநிலம் மலட்டுத்தன்மை வாய்ந்ததாகவும் நிலத்தடி நீர் மாசுப்படக்கூடிய நிலையிலும் உள்ளது,
வைகை குளோரைடு ஆலையிலிருந்து புகை போக்கி வழியாகவும், நீர்மமாகவும் வெளியேறும் கழிவு விவசாய நிலங்களில் கலப்பதை கண்டித்து மேலகாசாகுடியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியுள்ளனர். இருந்தும் இதற்க்கு நிரந்தரமான தீர்வு எட்டப்படவில்லை. இந்த அலையால் கிராம மக்கள் இரவு பகலாக அச்சத்தின் பிடியில் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பொதுமக்களின் வாழ்க்கைக்கும், விவசாயிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வைகை குளோரைடு ஆலையை கிராமத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம், நிலத்தடி நீர் ஆணையம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கூடிய விரைவில் இந்த பிரச்சனைக்கு முடிவு எட்டவில்லை என்றால், அனைத்து விவசாயிகள், சமூக அமைப்புகள், அரசியல் அமைப்புகளை ஒன்றிணைத்து வைகை குளோரைடு ஆலைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்த நேரிடும் என்கிற கருத்தையும் இக்கிராம மக்கள் எதிரொலிப்பதால், இக்கிராமம் மற்றும் சுற்று வட்டார வேளாண் பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது.