காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரேன்ஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனிஸ்வர பகவான் ஆலயம் உள்ளது.இங்கு ஸ்ரீ சனிபகவானுக்கு தனி சன்னதி என்பதால் மிகவும் பிரசித்திபெற்றது.
இங்கு 2,1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சியானது வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.மேலும் சனிப்பெயர்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.மேலும் வருகிற டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி மாலை 05.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார்.
இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழாவிற்க்கான முன்னெடுப்பு பணிகளுக்காக இன்று பந்தக்கால் மூகூர்த்தம் நடைபெற இருந்தது.இந்நிலையில் ஆலய நிர்வாகம் தனி அதிகாரி அருணகிரிநாதர் சார்பில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ ல ஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று காலை 9.15 - 10.30 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுவதாக இருந்த நிலையில் தம்பிரான் சுவாமிகள் பந்தக்கால் மூகூர்த்ததில் பங்கேற்காததால்,திருநள்ளாறு தர்பாரேன்ஸ்வரர் கோவில் தேவஸ்தானதை சேர்ந்த ஐந்து கிராம மக்கள் பந்தக்கால் முகூர்த்ததை புறக்கணித்து ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் பந்தக்கால் முகூர்த்தத்துக்கு பூஜைகள் தயார் நிலையில் இருந்த போதிலும் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ ல ஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் பங்கேற்காததால் பந்தக்கால் மூகூர்த்தம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் கூறுகையில் பந்தக்கால் முகூர்த்தம் குறித்து ஆலயம் சார்பில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ ல ஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகளுக்கு தகவல் தரப்பட்டது.அனால் அவர் பங்கேற்கவில்லை.மேலும் வேறு தேதியில் பந்தக்கால் முகூர்த்தம் நடத்தப்படுவது குறித்து மீண்டும் ஆலோசிக்கப்பட்டு தெரிவிக்கப்படும் என கூறினார்.