நாகையிலிருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் வழியாக சென்னை செல்லும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நேற்று இரவு வந்தது.பேருந்தை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்தார்.
ஓட்டுனர் செல்வராஜ் குடிபோதையில் இருந்ததாக அறியப்படுகிறது .நேற்றிரவு நாகையில் இருந்து புறப்பட்ட பேருந்து நாகூர் அருகே ஆட்டோவில் மோத இருந்ததாகவும்,சாலையின் குறுக்கே வைத்திருந்த பேரிகார்ட் மீது மோதியதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்து காரைக்கால் புதிய பேருந்து நிலையம் வந்ததும் பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர்.காரைக்காலில் இருந்து சென்னை செல்வதற்காக முன்பதிவு செய்த பயணிகளும், அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காரைக்கால் போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.தமிழக அரசு பேருந்தின் ஓட்டுனர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சேர்ந்த செல்வராஜ் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவரை 300கி.மீ தூரம் பயணம் செல்லும் பேருந்தின் ஓட்டுனராக அனுப்பி வைத்த நாகை டெப்போ அதிகாரிகள் அவரை சோதித்து அனுப்பாத நிலையில் நாகையிலிருந்து போதையில் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மீது காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் மேற்கொண்ட சோதனையில் ஆல்கஹாலின் அளவு 274.2என இருந்தது கண்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நாகை டெப்போ அதிகாரிகளிடம் பேசியது தொடர்ந்து வேறு பேருந்தில் பயணிகளை அனுப்பி வைத்த போலீசார் ஓட்டுனர் செல்வராஜை பேருந்துடன் காரைக்காலில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து காலை ஆஜராக அறிவுறுத்தினர்.
குடிபோதையில் பேருந்தை ஓட்டிய தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் திருநெல்வேலி சேர்ந்த செல்வராஜை பயணிகள் காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.