காரைக்காலில்
பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு மிரட்டல்
சிக்கிய வாலிபர் - போலீசார் விசாரணை
காரைக்கால் மாவட்ட பா.ம.க.செயலாளர் பிரபாகரனுக்கு சமூசாக வலைத்தளம் மூலம் மிரட்டல் விடுத்த வாலிபரை திருநள்ளாறு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்ட பா.ம.க.செயலாளராக இருந்தவர் க.தேவமணி. இவர் கடந்த 2021-இல் முன் விரோதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதையொட்டி தேவமணியின் இரண்டாவது நினைவு நாள் "மாவீரர் தினமாக" திருநள்ளாறு கடைத்தெருவில் பா.ம.க. அலுவலகத்தில் கடந்த 22-ம் தேதி கொண்டாடப்பட்டது.
அதில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க. மற்றும் சர்வகட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளரும், தேவமணியின் மகனுமான தே.பிரபாகரனை தமிழகத்தைச் சேர்ந்த கட்சிக்காரர் என்று கூறிக்கொண்டு சிலர் தொடர்பு கொண்டுள்ளனர்.
பிரபாகரனின் மொபைலுக்கு சமூக வலைத்தள தகவலை ஸ்க்ரீன் ஷாட்டாகவும் அனுப்பியுள்ளார். அதில் "நீங்கள் திருநள்ளாரில் வெறும் கூச்சல்தான் போட முடியும். மணி அண்ணனை மீறி நீங்கள் திருநள்ளாரில் ஒன்றும் செய்துவிட முடியாது.
அவரை மீறி ஒரு கல் கூட நகராது. நிலைமையை மாத்திடுவோம். மணி அண்ணன் சொன்னா நீங்க திருநள்ளாரில் நடமாடவே முடியாது" என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. அதை பிரபாகரனுக்கு தமிழக கட்சிக்காரர்கள் தகவலாக அனுப்பி இருந்தனர்.
இந்தத் தகவலை ஆராய்ந்தபோது திருநள்ளாறை அடுத்த நெய்வச்சேரியை சேர்ந்த ரமேஷ் என்பரின் நந்தா என்கிற நந்தகுமார் (22)என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பா.ம.க மாவட்ட இளைஞரணித் தலைவர் முருகன் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகைரளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நந்தகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.