புதுச்சேரி யூனியன் பிரதேச சுகாதார ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பு சார்பில் சுகாதார துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.5 ஆண்டுக்கு ஒரு முறை அரசு ஆணைப்படி பணி கட்டமைப்பு விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.ஊதியக்குழு சம்பள விகிதங்களை அமல்படுத்த வேண்டும். என்.ஆர்எச்எம் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.அதன் பிறகு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.இதையடுத்து, கடந்த 4 ந் தேதி சுகாதாரத்துறை செயலர் பங்கஜ் குமார் ஜாவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையும்,11 ம் தேதி 2ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இதில் சுகாதார ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளில் சில கோரிக்கைகளை நிறைவேற்ற சுகாதாரத்துறை செயலர் உறுதியளித்துள்ளார்.இதனால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது.தொடர்ந்து, வரும் 24ம் தேதி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதார ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமணசாமி கூறுகையில், சுகாதாரத்துறை செயலருடனான பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கைகள் தொடர்பாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 24ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எங்களது முடிவை அறிவிப்போம் என்றார்.
இதற்கிடையே வரும் 27ம் தேதி அனுமதியின்றி விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாமில் உள்ள சுகாதாரத்துறையின் அனைத்து அலுவலக தலைவர்களுக்கு சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநில சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.மத்திய சிவில் சேவை விதிகள் 1964 ன் படி, அத்தியாவசிய சேவை துறையில் அனுமதி இல்லாமல் வேலைக்கு வராமல் இருப்பது வேலை நிறுத்தமாக கருதப்படும் என்றும்,அரசு ஊழியர்கள் பணியின்போது வேலை நிறுத்தம் அல்லது வெளிநடப்பு போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தெளிவாக கூறுகிறது.
ஊழியர்கள் அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது வேலை நிறுத்தத்திற்கு சமமாக கருதப்படுவதுடன் மேற்குறிப்பிட்ட விதிகளின்படி அரசு ஊழியர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
எனவே, விதி விலக்கான சூழ்நிலைகளை தவிர,தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் எந்த ஒரு சுகாதார ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டாம். மேலும், அனுமதியின்றி பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.27ம் தேதி பணிக்கு வராதவர்களின் விவரங்கள் குறித்த அறிக்கையை dmspdyosd@ gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.