திருப்பட்டினம் அருகே மீன்பிடித் தொழிலுக்காக பைக்கில் சென்ற வாலிபர் பால் வாகனம் மோதி பலியானார். அவருடன் பைக்கில் சென்ற பெண் படுகாயமடைந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தம்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதமன்(42) இவர் நேற்று முன்தினம் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு பைக்கில் சென்றார். அப்போது மீன் வாங்குவதற்காக காரைக்கால் கிளம்பிய மீன் வியாபாரியான அவரது உறவினர் ராஜம்(38) என்பவரையும் பைக்கில் அமர வைத்து அழைத்து வந்தார்.
அப்போது திருப்பட்டினம் பிராவிடையான் பாலம் அருகே எதிர் திசையில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த டாடா ஏசி வாகனம் கௌதமனின் பைக் மீது மோதியது. இவ்விபத்தில் கவுதமனின் வாய், இடதுகாலில் பலத்த காயம் ஏற்பட்டது. பைக்கில் அமர்ந்து வந்த ராஜத்துக்கு மூக்கு, தலை, வலது காலில் அடிபட்டு சாலையில் சுயநினைவின்றிக் கிடந்தார்கள்.
விபத்தை ஏற்படுத்திய பால் வண்டியை ஒட்டி வந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த திருக்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிபாசு(42) விபத்து நடந்த இடத்திலிருந்து வாகனத்துடன் தப்பிச் சென்றார். விபத்தில் காயமடைந்த இருவரையும் தொடர்ந்து பைக்கில் வந்த உறவினர் சந்திரன்(43) காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இதில் சிகிச்சை பலனின்றி கௌதமன் உயிரிழந்தார். ராஜம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேற்படி உறவினர் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காரைக்கால் தெற்கு போக்குவரத்து போலீசார் விபத்தை ஏற்படுத்தி வாகனத்துடன் தப்பிச் ன்ற ஜோதிபாசுவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.