காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி அரசு நடுநிலைப் பள்ளியில்,கணித பட்டதாரி ஆசிரியர் சுரேஷ், மாணவர்களுக்கு கணித பாடத்தை, மிக எளிமையாக, ஆடல், பாடல், பூ, மணிகள் கொண்டு புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக,கணித ஆசிரியர் மாணவ, மாணவிகளுக்கு, கணித கருத்துகள் மற்றும் கணித சூத்திரங்கள் பாடல்கள் மூலம் கற்பிக்கும் நிகழ்ச்சி, கடந்த சில நாட்களாக நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சியினை பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
காரைக்கால் முருகந்தாள் ஆச்சி மேல்நிலைப்பள்ளியில் இசை ஆசிரியை வெற்றி செல்வி, மாணவர்களின் கணித பாடல்களை கேட்டு அவை இன்னும் மேம்பட பல அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் சுரேஷ், கணித சூத்திரங்கள் மனதில் நினைவு கொள்ளுமாறும், கணித கருத்துக்கள் எளிதாக புரியுமாறும் பாடல்களை எழுதி மாணாக்கர்களை பயிற்சி அளித்து இருந்தார்.
பாடல்கள் நாற்கரத்தின் பரப்பளவு முக்கோணத்தின் வகைகள், பலவித வடிவங்கள், புள்ளி விவரங்களின் எண்ணிக்கை குறிகள், பூஜ்ஜியம் மற்றும் குறை எண்களின் அறிமுகம், முழு எண்களின் கூட்டல், தனி வட்டி ஆகிய தலைப்புகளில் உருவாக்கப்பட்டிருந்தன. தமிழ் மொழிப் பாடல்கள் பட்டதாரி தமிழாசிரியை மகேஸ்வரி மற்றும் ஆங்கில வழிப் பாடல்கள், பட்டதாரி ஆங்கில ஆசிரியை திலகா ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படி உருவாக்கப்பட்டதாக கணித ஆசிரியர் சுரேஷ் கூறினார்.
இளம் மாணாக்கர்கள் ஆடல் பாடல் ஓவியம் இவற்றில் ஆர்வம் காட்டுவதால், கணித பாடத்தின் சில சூத்திரங்களையும், சில கருத்துக்களையும் பாடல்கள் மூலம் கற்பிப்பதாக தெரிவித்தார். இந்த வினோத பாடல்களை, மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களுடைய தனித்துவத்துடன் கணிதப் பாடல்களை பாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தி கற்றுக் கொண்டு வருகின்றனர். ஆசிரியரின் இந்த பாடல்கள் மூலம் கணிதம் கற்பிப்பது வீடியோ, சில சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.