புதுவை யூனியன் பிரதேசம் முழுவதும் தொடக்கக் கல்வி முதல் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் உள்ளது. காரைக்காலில் பல்வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில்,பள்ளிகளை அழகுபடுத்தும் பணி, ஸ்மார்ட் வகுப்பறை, சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கொம்யூன், நடுக்களம்பேட் கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு தொடக்கப்பள்ளி 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இப்பள்ளி பொன்விழாவை கடந்து செயல்பட்டு வருகிறது.
பள்ளியானது இரு ஆசிரியைகளைக் கொண்டு இயங்குகிறது.மாணவர்களை மகிழ்விக்கவும், அரசுப் பள்ளியை விரும்பி மாணவர்கள் சேரும் விதத்திலும்,பள்ளியின் வாயில் சுவர் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள சுவர்களில் சிறுவர்கள் விரும்பும் வகையிலான வண்ண ஓவியம், கற்றல் தொடர்பான ஓவியத்தை பள்ளி பொறுப்பாசிரியை பவானி மற்றும் ஆசிரியை கலாவதி ஆகியோர் தீட்டியுள்ளனர்.
ஓவியங்கள் பார்வையிட்ட கல்வித்துறையின் வட்ட துணை ஆய்வாளர் பால்ராஜ்.அருகில் ஆசிரியைகள் பவானி மற்றும் கலாவதி.
சிறார்களை ஈர்க்கும் விதத்தில் பள்ளியை அழகுப்படுத்திய ஆசிரியைகளுக்கு கிராமத்தினர், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.கல்வித்துறையின் வட்ட துணை ஆய்வாளர் பால்ராஜ் நேற்று முன்தினம் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்கள் கற்றல் மேம்பாட்டுக்கு பள்ளி ஆசிரியைகளின் முயற்சியை சால்வை அணிவித்து கௌரவித்துப் பாராட்டினார்.