திருப்பட்டினத்தில்-60 வயது வாலிபருக்காக மனைவி-காதலி பாக்சிங்
திருப்பட்டினத்தையடுத்த கீழ வாஞ்சூரில் குடும்பம், பேரப்பிள்ளைகள் என்று வாழும் 60 வயது வாலிபர் மீதான உரிமைப் போராட்டத்தில் காதலி, மனைவி கட்டைகளால் தாக்கிக் கொண்டது தொடர்பாக இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி விசாரணை மேற்கொண்டார்.
கீழவாஞ்சூர் தனியார் துறைமுகம் அருகே ஓட்டல் நடத்தி வருபவர் பக்கிரிசாமி மனைவி மலர்விழி(45) இத்தம்பதியருக்கு விநாயக பாண்டியன், அஜய் பரத், அரவிந்தன், ஹரிபிரசாத், ஹரிஷ் என்ற மகன்கள், ஆஷா என்ற மகளும் உள்ளனர். 8 வருடங்களுக்கு முன்பு பக்கிரிசாமி கருத்து வேறுபாட்டால் மலர்விழியைப் பிரிந்து சென்று விட்டார்.
அதன்பின் கடந்த 8 வருடங்களாக மனைவி சியாமளாகவுரி (55), பிள்ளைகள் வினோத்(31), ஜான்சி(36), வின்சி(33) அகியோரைப் பிரிந்து வாழும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் செம்மரக்கடைத் தெருவைச் சேர்ந்த கன்னையன் மலர்விழியின் ஓட்டலுக்கு சாப்பிட வந்துள்ளார். கடலோர துறைமுகம் அருகே இருவரும் கண்களால் பேசி, 'காதல் விவசாயம்' செய்து வந்தனர்.
கீழவாஞ்சூர் துறைமுகம் அருகே ஓட்டலில் மலர்விழியுடன் கண்ணையன் இருப்பது மனைவி சியாமளாகவுரிக்குத் தெரிந்து போனது. இதனால் ஆத்திரமடைந்த சியாமளாகவுரி, தனது மகள் ஜான்சி, மருமகன் ஜோசப் மற்றும் தனது தங்கை விஜயாவுடன் நாகூரிலிருந்து கீழவாஞ்சூர் வந்தார். மலர்விழியின் ஓட்டலில் இருந்த கண்ணையன்-மலர்விழி இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மலர்விழியிடம் "என் கணவரை ஏன் நீ வைத்திருக்கிறாய்?" என்றுசியாமளா கேட்டார். மேலும் சியாமளாகவுரி, ஜான்சி, ஜோசப், விஜயா நால்வரும் கண்ணையன், மலர்விழி இருவரையும் கேவலமாகத் திட்டி கைகளால் தாக்கினர். ஜோசப் அருகில் கிடந்த விறகுகட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் மலர்விழியின் கை முட்டியில் காயம் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரம் அடைந்த கண்ணையன் அருகில் கிடந்த விறகுக் கட்டையை எடுத்து சியாமளாவை அசிங்கமாகப் பேசி, அடிக்க முற்பட்டார். அப்போது கன்னையனின் கையில் இருந்த விறகுக் கட்டையைப் பறித்து சியாமளாவின் தலையில் மலர்விழி அடித்தார். இதில் சியாமளாவின் மண்டை பிளந்தது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவரவே கன்னையனும், மலர்விழியும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தலையில் இரத்தம் வழிய துடித்த சியாமளாவை மருமகன் ஜோசப், மகள் ஜான்சி ஆட்டோவில் ஏற்றி நாகூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தாக்குதலில் காயமடைந்த மலர்விழி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சியாமளா மற்றும் மலர்விழி இருவரது புகார்கள் மீதும் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, சியாமளா, அவரது கணவர் கண்ணையன், மலர்விழி, ஜோசப், ஜான்சி, விஜயா அகியோரைக் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.