காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலையான பாரதியார் சாலையின் பாதாள சாக்கடைப் பணிகள் நடப்பதால், நாகப்பட்டினம்-சென்னை உள்ளிட்ட முக்கிய மார்க்கங்களில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று சாலை வழியாக செல்லத் தொடங்கின.
காரைக்கால் மாவட்டத்தில் தொடங்கியுள்ள பருவமழை காரணமாக கனமழை பெய்கிறது. மழை நீரானது நகர்ப்புறம், புறநகர் மற்றும் கிராமப் புறங்களில் தேங்கி நிற்கிறது. ஏற்கெனவே காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு கொசுக்களால் உடல் உபாதைகளுக்கு உட்பட்ட நோயாளிகள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
சிலர் உள் நோயாளிகளாகவும், எஞ்சியவர்கள் புறநோயாளிகளாகவும் சிகிச்சையில் உள்ளனர். இதை தவிர கிராமப்புற சமுதாய நலவழி மையம், ஆரம்ப சுகாதார மையங்களிலும் பலர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நலவழித்துறை குப்பைகள், கழிவுகளை அகற்றவும், டெங்கு கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் களப்பணியாற்றுகின்றனர்.
இருந்தபோதும், மழை நீர் பள்ளங்கள், தாழ்வான பகுதிகளில் தேங்கி டெங்கு கொசுக்கள் உருவாகாமலிருக்க வடிகால்கள் அடைசல்களை அகற்றிட பொதுப்பணித்துறை மற்றும் காரைக்கால் நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். இதையடுத்து முதல் கட்டமான நகரின் முக்கிய சாலையான பாரதியார் வீதி சிக்னல் அருகில் மழைநீர் வடியாமல் வாகனப்போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
வணிக நிறுவனங்கள், கடைகள், பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகள், கொட்டாங்கச்சி, பெட் பாட்டில்கள், கண்டெயினர்களை குப்பைத் தொட்டிகளில் போடாதது தெரிய வந்தது. மேலும், இக்கழிவுகளை சாக்கடைகளில் வீசுவதாலேயே சாக்கடைகளில் அடைப்புகள் ஏற்பட்டு கொசு உற்பத்திக்கும் காரணமானதும் தெரிந்தது. நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிக்னல் பகுதியில் அடைப்புகளை நீக்கும் பணிகளைத் தொடங்கினர்.
பாரதியார் வீதியின் குறுக்கே பாதாள சாக்கடையில் சிமெண்ட் பலகைகளை ஜெசிபி எந்திரங்களால் நகர்த்தி, சாக்கடையில் அடைப்புகளை நீக்கும் பணியைத் தொடங்கினர். அதிகாலை முதல் நண்பகல் வரை துப்புரவுத் தொழிலாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்து சுமார் 2 டன் எடை அளவில் பிளாஸ்டிக் பைகள், துணிகள், மரப் பெட்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் சாக்கடைக்குள்ளிருந்து அப்புறப்படுத்தினர்.
காரைக்காலில் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான பாரதியார் வீதியின் இருபுறமும் போலீசார் சாலைத் தடுப்புகளை வைத்து, சென்னை-நாகப்பட்டினம், காரைக்கால் -திருச்சி, காரைக்கால்-திருவாரூர் செல்லும் வாகனங்களை மாற்று வழிகளில் அனுப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் முதல் நாகப்பட்டினம் மார்க்கத்தில் செல்லும் கனரக வாகனங்கள் காமராஜர் சாலை வழியாகவும், திருச்சி மார்க்கத்தை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஜிப்மர் சாலை வழியாகவும் அனுப்பப்படுகின்றன.
காரைக்காலில் பெரும்பாலான வடிகால்களை கழிவுகளை அகற்றி, தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறையினருக்கு சாக்கடைகளில் வீசப்படும் பிளாஸ்டிக், துணி மற்றும் மரக்கழிவுகள் பெரும் சவாலாகவே நீடிக்கின்றன.